மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற பெயர் பலகை


மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற பெயர் பலகை
x
தினத்தந்தி 6 Aug 2021 3:55 PM IST (Updated: 6 Aug 2021 3:55 PM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பதற்கான அறிவிப்பு பலகையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழகத்தில் நீண்ட நாட்களாக பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய உள்ள விவரம் குறித்த பதாகையை வெளியிட்டார். அதைதொடர்ந்து சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திறந்து வைத்தார். பின்னர் தமிழ் மொழியில் நடத்தப்பட்ட வழிபாட்டையும் தொடங்கி வைத்தார்.

அறிவிப்பு பலகையில் தமிழில் அர்ச்சனை செய்யும் குருக்களின் பெயர்கள் செல்போன் எண்ணுடன் இடம்பெற்றுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் இவர்களை தொடர்பு கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

47 கோவில்கள்

வடபழனி முருகன் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சாமி கோவில் உட்பட 47 முதுநிலை கோவில்களிலும் விரைவில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் முறை தொடங்கப்பட உள்ளது. அதன்பிறகு அனைத்து கோவில்களிலும் படிப்படியாக தொடங்கப்படும்.

நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், தா.வேலு எம்.எல்.ஏ., மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தக்கார் டி.விஜயகுமார் ரெட்டி, இணை கமிஷனர் தா.காவேரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறும்போது, “ஆடி மாத திருவிழாக்களின்போது அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் சில கோவில்கள் மூடப்பட்டு உள்ளது. கொரோனா காலகட்டத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்டிகைகள் வந்தாலும் அந்த வழிபாட்டுத்தலங்களும் மூடப்படும்” என்றார்.

Next Story