அறிஞர்கள் பெயர் அடையாளத்தை சிதைக்க கூடாது: ‘தமிழகத்தில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவம்’ டாக்டர் ராமதாஸ் அறிக்கை


அறிஞர்கள் பெயர் அடையாளத்தை சிதைக்க கூடாது: ‘தமிழகத்தில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவம்’ டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2021 1:10 PM GMT (Updated: 2021-08-06T18:40:38+05:30)

அறிஞர்கள் பெயர் அடையாளத்தை சிதைக்க கூடாது: ‘தமிழகத்தில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவம்’ டாக்டர் ராமதாஸ் அறிக்கை.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் படியான 12-ம் வகுப்பு பொதுத்தமிழ் பாடநூலில் பாட ஆசிரியர் பெயரா கவும், சான்றோர் வரலாற்றிலும் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் பலரின் பெயர்களில் இருந்து சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் கூட, இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தைதான் அழிக்கும்.

சாதாரணமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவதில் எந்த தவறும் இல்லை. சாதனையாளர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் நீடிப்பதை விதிவிலக்காக அனுமதிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றவர்களை எவரும் சாதிக்காக போற்றவில்லை, சாதனைகளுக்காகவே போற்றுகின்றனர். அதனால், அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர் இருப்பதால் சாதி பரவாது.

ஏற்கனவே சாதிப் பெயர்களுடன் கூடிய தலைவர்களின் பெயர்கள் பாடநூல்களிலும், இதர ஆவணங்களிலும் அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவத்தை ஏற்படுத்துவதுதான். அதற்கான நடவடிக்கைகளைத்தான் அரசு விரைவுபடுத்த வேண்டும். அந்த நடவடிக்கைகளை பா.ம.க. ஆதரிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story