நாளை 3-ம் ஆண்டு நினைவு நாள்: கருணாநிதியின் உருவப்படத்தை வீட்டு வாசலில் வைத்தே புகழ் வணக்கம் செலுத்துவோம்


நாளை 3-ம் ஆண்டு நினைவு நாள்: கருணாநிதியின் உருவப்படத்தை வீட்டு வாசலில் வைத்தே புகழ் வணக்கம் செலுத்துவோம்
x
தினத்தந்தி 6 Aug 2021 1:19 PM GMT (Updated: 6 Aug 2021 1:19 PM GMT)

3-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுவதையொட்டி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை வீட்டு வாசலில் வைத்தே புகழ் வணக்கம் செலுத்துவோம் என்று தி.மு.க.வினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,


தி.மு.க. தலைவரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் வடிவில் எழுதியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

3-ம் ஆண்டு நினைவேந்தல்

இயற்கையின் கரங்கள் கொய்து சென்ற நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதிக்கு இது 3-ம் ஆண்டு நினைவேந்தல். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் எல்லா நாளிலும், அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் இயக்கமில்லை.

நாம் மட்டும் அவரைப் போற்றவில்லை; நாடு போற்றுகிறது. நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடுச் சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, தலைவர் கருணாநிதியின் உருவப் படத்தினைத் திறந்து வைத்து, அவரது பெருமைகளை எடுத்துரைத்ததைக் கண்டோம்.

உருவப்படம் திறப்பு

சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கும், கருணாநிதியின் உருவப் படத்திறப்பு விழாவுக்கும் தலைமை வகித்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் பன்முகத்தன்மையையும், அவற்றின் சிறப்பியல்புகளையும் எடுத்துக்காட்டி உரையாற்றினார்.

முத்தமிழறிஞர் கருணாநிதியின் பொதுவாழ்வும் அவரது சாதனைகளும் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாதவை. அதைத்தான் ஜனாதிபதியும், கவர்னரும் எடுத்துரைத்தனர். அத்தகைய மகத்தான சிறப்புமிக்க நம் தலைவரின் உருவப்படத்தைச் சட்டமன்றத்தில் திறந்து வைப்பதற்கு, அவர் மறைந்து 3 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

மகிழ்கிறேன் - நெகிழ்கிறேன்

இந்திய அரசியல் தலைவர்களின் முன்மாதிரியான தலைவருக்கு, தி.மு.க. அரசு அமைந்த பிறகுதான் சட்டமன்ற மண்டபத்தில் உருவப் படம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

அதனால்தான் அந்த விழாவில், நான் உரையாற்றும்போது, “இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி, தமிழன்னையின் தலைமகனான கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மகிழ்கிறேன் - கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்” எனக் குறிப்பிட்டேன்.

தீயைத் தாண்டி வந்திருக்கிறது

அந்த விழாவின் சிறப்பினை நினைக்கையில், ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன். கருணாநிதி வழியில் ஆட்சி நிர்வாகத்தினைப் பயில்கிறேன். “தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன்” என்று ‘பராசக்தி’ திரைப்படத்தில் தலைவர் கருணாநிதி எழுதியிருப்பார். அவரது ஓய்விடத்தில் சூளுரைத்தபடி, 6-வது முறையாக ஆட்சியமைத்திருக்கும் தி.மு.க. இந்தத் தேர்தல் களத்தில் தென்றலைத் தீண்டவில்லை. தீயைத் தாண்டி வந்திருக்கிறது.

இன்னும் கடக்க வேண்டிய நெருப்பாறுகள் உண்டு. அதனைக் கடந்து நிற்கும் வலிமையும் இந்த இயக்கத்திற்கு உண்டு. அதன் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருக்கும் என்னை வழிநடத்தும் பேராற்றல் கருணாநிதி எனும் வரலாற்று நாயகருக்குரியது. அதனால்தான், மக்களின் பேராதரவுடன் தனிப்பெரும்பான்மைமிக்க ஆட்சியினை அமைத்திருக்கிறோம்.

தலையாய கடமை

உயிர்நிகர் தலைவர் கருணாநிதி நம்மிடையே உலவவில்லை என்றாலும், உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் அவர் நமக்கு ஊட்டிய உணர்வு நம் குருதியோட்டத்தில் கொள்கையோட்டமாக இருக்கிறது. அவர் காட்டிய பாதை, அவர் அளித்த பயிற்சி, அதனால் அமைந்திருப்பதும் அவரது ஆட்சி என்பதை நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டுதான் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ஆகிய நான் முதல்-அமைச்சர் பொறுப்பினை ஏற்றேன்.

‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ எனத் தலைவர் கருணாநிதி வகுத்தளித்த நெறியின்படி, மாநிலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், பேரிடர் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அரணாக இருந்து, தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தலையாய கடமையாகக் கொண்டு செயலாற்றுகிறேன்.

புகழ் வணக்கம்

நெஞ்சில் நிறைந்துள்ள தலைவர் கருணாநிதியிடம் அதற்கான வழியினைக் கற்றிருக்கிறேன். அவரிடம் இருந்து அதற்கான வலிமையையும் பெற்றிருக்கிறேன். உங்களின் துணையுடனும் - தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடனும் தலைவர் கருணாநிதி வழியில் தி.மு.க. அரசின் பயணம் தொடரும் என்பதை அவரது 3-ம் ஆண்டு புகழ் வணக்க நேரத்தில் உறுதிமொழிகிறேன்.

கொரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை முறையாகக் கடைப்பிடித்து, ஆகஸ்டு 7-ந்தேதி அன்று (நாளை) அவரவர் இல்லத்தின் வாசலில் தலைவர் கருணாநிதியின் படத்தினை வைத்து, மாலையிட்டு, மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டுகிறேன். பெரு விழாக்கள் வேண்டாம். அலங்காரங்கள், ஒலிபெருக்கிகளைத் தவிர்த்திடுவீர். நம் நெஞ்சங்களிலும் நினைவுகளிலும் நிரந்தரமாக இருந்து, நாட்டை வழிநடத்தும் கருணாநிதிக்கு வீடுகள்தோறும் மரியாதை செலுத்திடுவோம். அவர் வகுத்த பாதையில் பயணித்து தமிழ்நாட்டை மாண்புறச் செய்திடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story