படப்பிடிப்பில் விபத்து: டைரக்டர் சேரன் காயம்


படப்பிடிப்பில் விபத்து: டைரக்டர் சேரன் காயம்
x
தினத்தந்தி 6 Aug 2021 7:43 PM IST (Updated: 6 Aug 2021 7:43 PM IST)
t-max-icont-min-icon

படப்பிடிப்பில் விபத்து: டைரக்டர் சேரன் காயம்.

சென்னை,

தமிழ் திரையுலக முன்னணி டைரக்டர்களில் ஒருவர் சேரன். இவர் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.

ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்தும் உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது நந்தா பெரியசாமி இயக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்தது. அங்கு புதிதாக கட்டப்படும் வீடு ஒன்று திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டின் மேற்பகுதியில் நின்று சேரன் நடித்துக்கொண்டு இருந்தபோது கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சேரனுக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. அதன் பிறகு படப்பிடிப்பில் அனைத்து நடிகர்களும் இருப்பதால் தன்னால் படப்பிடிப்பு ரத்தாக கூடாது என்று கருதி தொடர்ச்சியாக தனது காட்சிகளை நடித்துக் கொடுத்தார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Next Story