

வேலூர்
ரவுடிகள் மீது நடவடிக்கை
காவல்துறையில் வேலூர் சரகத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளது. இந்த மாவட்டங்களில் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும், நடைபெற்ற குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் பெறப்படும் புகார் மனுக்களை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சரக டி.ஐ.ஜி. பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு வேலூர் சரகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் 1,123 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
1,123 பேர் மீது நடவடிக்கை
வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மற்றும் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இரவு நேரங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தவும், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டது. குற்றங்கள் நடைபெறாமல் இருக்க கடந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து கடந்த 4-ந் தேதி வரை 21 நாட்களில் வேலூர் சரகத்தில் 1,123 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 53 ரவுடிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74 ரவுடிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 58 ரவுடிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 ரவுடிகளும் என 224 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இதில் 82 ரவுடிகள் அதிக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
899 ரவுடிகள் குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என எழுதி கொடுத்துள்ளனர். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.