தெளிப்பு நீர் பாசனம்மூலம் தக்காளி சாகுபடி


தெளிப்பு நீர் பாசனம்மூலம் தக்காளி சாகுபடி
x
தினத்தந்தி 6 Aug 2021 11:00 PM IST (Updated: 6 Aug 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

தளி பகுதியில் விவசாயிகள் தெளிப்பு நீர் பாசனம்மூலம் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

தளி
தளி பகுதியில் விவசாயிகள் தெளிப்பு நீர் பாசனம்மூலம் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.
தக்காளி சாகுபடி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள பொருப்பாறு, கோடந்தூர், ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், மாவடப்பு, குளிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களது பிரதான தொழில் விவசாயம் ஆகும். ஆனால் சமதளப்பரப்பு போன்று வனப்பகுதியில் விவசாயம் செய்வது எளிதான காரியம் அல்ல.மேடும் பள்ளமுமான பகுதியை சமன் செய்து அதில் உள்ள பாறைகளை அகற்றி நிலத்தை தயார் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து ஆறுகளில் இருந்து குழாய் மூலம் விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும்.அதன் பின்பே சாகுபடி பணிகளை தொடங்க முடியும்.
தக்காளி, பீன்ஸ், இஞ்சி, மஞ்சள், வாழை, தென்னை, நெல், மரவள்ளி, எலுமிச்சை உள்ளிட்டவை இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. அத்துடன் வடுமாங்காய், கலாக்காய், கடுக்காய், இலந்தைப்பழம், இயற்கையாகவே விளைகிறது.அதுதவிர கால்நடை வளர்ப்பிலும் தைலம்காய்ச்சி விற்பனை செய்தல் உள்ளிட்ட சுயதொழிலும் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பொருப்பாறு மலைவாழ் விவசாயிகள் கூறியதாவது
தண்ணீரை கொண்டுவருவது சிக்கல்
இயற்கை முறையில் விவசாயம் செய்வதை தலையாய கடமையாகக் கொண்டு உள்ளோம்.அதற்கு பருவமழை கை கொடுத்து உதவினால் மட்டுமே சாத்தியமாகும்.ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்ட பின்பு குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து சாகுபடி பணிகளை தொடங்குகிறோம். பருவமழை அதிகமாக பெய்தாலோ அல்லது குறைந்து விட்டாலோ பயிர்கள் சேதமடைந்து விடுவதால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.அத்துடன் விளை நிலங்களை ஆக்கிரமித்து வளரும் பார்த்தீனியம் செடிகள் மற்றும் சீமைக்கருவேலான் மரங்கள் சாகுபடி பணிகளுக்கு பெரிதும் சவாலாக உள்ளது.
அதுதவிர பாசனநீரை கொண்டு வருவதாக அமைக்கப்பட்ட குழாய்களை யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தண்ணீரை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தக்காளி சாகுபடி
ஆனாலும் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக சாகுபடி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். தற்போது தக்காளி சாகுபடி செய்துள்ளோம்.அதற்கு தெளிப்பு நீர் பாசனம் மூலமாக தண்ணீர் பாய்ச்சுவதுடன் முறையான பராமரிப்புகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதனால் செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.ஆனால் பயிர்கள் அறுவடையை நெருங்கும் சூழலில் வனவிலங்குகள் அதை சேதப்படுத்தும் தொடர்கதையாக உள்ளது. எனவே வனப்பகுதியில் விவசாய தொழிலை ஊக்குவிப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும். இயற்கை பேரிடர்கள், பருவநிலை மாறுதல், வனவிலங்குகள் மூலமாக ஏற்படுகின்ற இழப்பீட்டை ஈடுகட்டுவதற்கும் உதவிகள் செய்ய வேண்டும்.இதனால் விவசாய தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story