தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி
மோடி படத்துடன் கூடிய விளம்பர பதாகையை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளை தாக்கியதாக 2 பா.ஜ.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை விடுவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயன்றதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தஞ்சாவூர்:
மோடி படத்துடன் கூடிய விளம்பர பதாகையை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளை தாக்கியதாக 2 பா.ஜ.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை விடுவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயன்றதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
விளம்பர பதாகைகள் அகற்றம்
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதையொட்டி மாநகரில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் உண்ணாவிரதத்திற்கு வரும் நிர்வாகிகளை வரவேற்று விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன.
அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்ததால் அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். தஞ்சை எலிசா நகரில் மாநகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் ஊழியர்கள் விளம்பர பதாகைகளை அகற்றினர்.
அதிகாரிகள் மீது தாக்குதல்
அப்போது உண்ணாவிரதத்தில் பங்கேற்பதற்காக வெளியூரில் இருந்து வேனில் வந்து கொண்டிருந்த பா.ஜ.க.வினர், விளம்பர பதாகைகள் அகற்றப்படுவதை பார்த்தவுடன், வேனில் இருந்து கீழே இறங்கி சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலர் அதிகாரிகளை தாக்கவும் செய்தனர். இதை அறிந்த தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அதிகாரிகளுடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் விளம்பர பதாகைகள் ஏற்றப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான வாகனத்தின் டயரில் இருந்து காற்றையும் பா.ஜ.க.வினர் பிடுங்கி விட்டனர். மேலும் அந்த வாகனத்தை சிலர் சேதப்படுத்தினர்.
2 பேர் கைது
இது தொடர்பாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் மாநகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் அளித்த புகாரின்பேரில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பண்ணைவயல் இளங்கோ உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் லால்குடியை சேர்ந்த தெற்கு மண்டல தலைவர் அசோக்குமார்(வயது 44), அறந்தாங்கி நகர செயலாளர் இளங்கோவன்(33) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்கக் கோரியும், வழக்கு போட்டதை கண்டித்தும் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வதற்காக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் நேற்று காலை வந்தனர்.
முன்னதாக இவர்கள் அனைவரும் போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவை சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக தீர்வு காரணமாக முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்ட அறிவிப்பு காரணமாக தஞ்சை கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
போலீசார் துன்புறுத்தியதாக
பின்னர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் உருவப்படத்துடன் உண்ணாவிரதத்திற்கு வந்த நிர்வாகிகளை வரவேற்று அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியபோது, பா.ஜ.க.வினர் தாங்களே அகற்றுவதாக கூறியுள்ளனர். ஆனால், போலீசாரும், அதிகாரிகளும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இது சாதாரண விஷயம். கட்சியினர் சொன்ன விஷயத்தை ஏற்றுக்கொள்ளாமல் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று சிலரை கைது செய்துள்ளனர். அவர்களை போலீசார் துன்புறுத்தியதாக கேள்விப்பட்டோம். ஆனால் கைது செய்யப்பட்டவர்களை எங்கு கொண்டு சென்றனர் என தெரியவில்லை.
மனித உரிமை மீறல்
பயங்கரவாதிகளை கூட இவ்வளவு ரகசியமாக எங்கேயும் கொண்டு போயிருக்க முடியாது. போலீசார், அதனை மறைக்கின்றார்கள். இது மனித உரிமை மீறல். குடிநீருக்காக போராடும்போது, குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது தவறு என வழக்கு தொடுப்பார்கள் என்றால், தவித்த வாய்க்கு தண்ணீர் தராத பாவத்தை இந்த அரசு செய்வதாக கருதுகிறேன்.
தி.மு.க.வினர் எப்படி எமர்ஜென்சியை கண்டார்கள். எமர்ஜென்சி காலகட்டத்தில் தி.மு.க.வினர் எப்படி இருந்தார்கள். கரைவேட்டிகள் எங்கு போனது? எப்படி காணாமல் போனது? என எங்களுக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story