நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
சிறமடம் மற்றும் கடுக்கரையில் மேலும் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பது குறித்து கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
சிறமடம் மற்றும் கடுக்கரையில் மேலும் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பது குறித்து கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
குமரி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. கூட்டத்தில் விவாதித்தபடி தாழக்குடி, திட்டுவிளை, செண்பகராமன்புதூர், தேரூர், புத்தளம், திங்கள் நகர் பகுதிகளில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நேரடி கொள்முதல் நிலையங்களை கலெக்டர் அரவிந்த் கள ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தாழக்குடி மற்றும் திட்டுவிளை நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உலர்த்தவும், மூடை கட்டவும் இடவசதி குறைவாக உள்ளது. எனவே, தற்காலிக தளம் மற்றும் மேற்கூரை அமைக்க அறிவுரை வழங்கினார்.
புதிய கொள்முதல் நிலையங்கள்
சிறமடம் அரசு தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதற்காக கள ஆய்வு செய்தார்.
செண்பகராமன்புதூரில் அமைந்துள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து, பழுதடைந்த மேற்கூரை மற்றும் களத்தினை பழுது நீக்க அறிவுரை வழங்கினார்.
தேரூர் மற்றும் திங்கள்நகரில் ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் பார்வையிட்டு அவற்றை மேம்படுத்தவும், சிறந்த முறையில் செயல்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். புத்தளம் பகுதியில் கடந்த காலங்களில் கொள்முதல் நிலையம் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த பருவத்திலும் அது தொடர்ந்து செயல்படவும், விரைவில் மாற்று இடம் அமைத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டது.
அதிகாரிகள்
ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மாரிமுத்து, துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஏழிசை செல்வி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ஜெங்கின் பிரபாகர், வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் விஷ்ணப்பன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story