முன்விரோதத்தில் கொலை மிரட்டல்; இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு


முன்விரோதத்தில் கொலை மிரட்டல்; இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Aug 2021 1:46 AM IST (Updated: 7 Aug 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதத்தில் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வீரபோகம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 35). இதே கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது ராஜேஸ்வரி கடந்த மாதம் 28-ந்தேதி இறந்துவிட்டார். பாலமுருகன் அந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

அப்போது அங்கு வந்த ஆனந்தன் என்பவர், செந்தில்குமாருக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 3-ந் தேதி மதியம் பிள்ளையார் கோவில் வழியாக சென்றபோது, அங்கு பேசிக்கொண்டிருந்த ஆனந்தன், விஜய், செந்தில்குமார், சரவணன் ஆகியோர் பாலமுருகனை ஆபாசமாக திட்டி, அருகில் இருந்த கட்டை மற்றும் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் 4 பேர் மீது மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் போலீசில் ஆனந்தன் கொடுத்த புகாரில், எங்கள் ஊர் ஏரிக்கரை வழியாக சென்றபோது, தன்னை அங்கு பேசிக்கொண்டிருந்த பாலமுருகனும், சுரேசும் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்ததாக தெரிகிறது. அதன்பேரில் 2 பேர் மீது மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story