சிறுகனூர் அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டில் புகுந்து பீரோவை தூக்கிச்சென்று 10 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


சிறுகனூர் அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டில் புகுந்து பீரோவை தூக்கிச்சென்று 10 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Aug 2021 8:20 PM GMT (Updated: 2021-08-07T01:50:46+05:30)

சிறுகனூர் அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டில் புகுந்து பீரோவை தூக்கிச்சென்று, அதில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சமயபுரம்,
சிறுகனூர் அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டில் புகுந்து பீரோவை தூக்கிச்சென்று, அதில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 55). விவசாயி. இவருக்கு 2 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் மருமகள் கோமதி தங்கியுள்ளார். மற்றொரு வீட்டில் சின்னத்துரை குடியிருந்து கொண்டு ஆடு, மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு சின்னத்துரை படுத்து தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவை காணவில்லை.

10 பவுன் நகை திருட்டு

வெளியே வந்து பார்த்த போது, வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போயிருந்தன. இதுபற்றி அவர் சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சின்னத்துரை தூங்கிக்கொண்டிருந்த போது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவை தூக்கிச்சென்று அதில் இருந்த நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. 

வலைவீச்சு

இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

அது சிறிது தூரம் வரை ஓடி சென்று நின்று கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story