கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 6 Aug 2021 8:57 PM GMT (Updated: 6 Aug 2021 8:57 PM GMT)

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் ஆடி 3-வது வெள்ளியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அரியலூர் கபிரியேல் தெருவில் உள்ள மகா காளியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு நூற்றுக்கணக்கான புடவைகளை சாத்தி அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல் உடையார்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள கருமாரி அம்மனுக்கு நேற்று 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு, மலர்கள் மற்றும் வேப்பிலையால் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உடையார்பாளையம் இடையார் சாலையில் உள்ள கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பெரியநாயகி அம்மனுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பால்குட விழா
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
செந்துறை வட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது. இதில் கோவிலில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் நல்லநாயகபுரம், குழுமூர் இடையில் உள்ள வேலானி கரைக்கு சென்று சக்தி அழைத்துச் கொண்டு, பால்குடம் எடுத்து தலையில் சுமந்து ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு மாரியம்மன், செல்லியம்மன் சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, கூழ் வைத்து படையலிட்டு பொதுமக்களுக்கு பால், கூழ் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக பக்தர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Next Story