கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 7 Aug 2021 2:27 AM IST (Updated: 7 Aug 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர்:

பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு கடந்த 2-ந்தேதி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தடை விதித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று சுவாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அம்மன் கோவில்களுக்கு உள்ளே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
வெளியே நின்று தரிசனம்
இதில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு நேற்று காலை முதலே உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். கோவிலின் உள்ளே தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கி சென்றதை காணமுடிந்தது. சிறிய அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மங்களமேட்டை அடுத்த சு.ஆடுதுறை ஊராட்சியில் உள்ள குற்றம் பொறுத்தவர் கோவிலில் நேற்று சிவன் மற்றும் அம்மனுக்கு காலையில் பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தடை காரணமாக கோவிலுக்கு குறைந்த அளவே பக்தர்கள் வந்தனர். ேமலும் ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு ஆடுதுறை மாரியம்மன் கோவில், அத்தியூர் செல்லியம்மன் கோவில், அகரம்சீகூர் கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் குறைந்த அளவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

Next Story