பனமரத்துப்பட்டி அருகே காரில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல் கோழிப்பண்ணை உரிமையாளர் கைது


பனமரத்துப்பட்டி அருகே காரில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல் கோழிப்பண்ணை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 2:31 AM IST (Updated: 7 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

பனமரத்துப்பட்டி அருகே காரில் கடத்திய 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கோழிப்பண்ணை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பனமரத்துப்பட்டி
6 கிலோ கஞ்சா
சேலம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் மாவட்டத்தில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கந்த பிள்ளையார் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த மூட்டையில் பொட்டலம், பொட்டலமாக 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 
கைது
இதையடுத்து காரில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி டவுன் நேதாஜிநகரை சேர்ந்த நீலகண்டன் (வயது 29) என்பதும், அந்த பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வரும் அவர், கஞ்சாவை கடத்தி வந்து, அதனை சேலத்திற்கு விற்பனைக்காக கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலகண்டனை கைது செய்தனர். மேலும், 6 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story