ஜமீர் அகமதுகான் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை


ஜமீர் அகமதுகான் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 7 Aug 2021 3:15 AM IST (Updated: 7 Aug 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நகைக்கடை அதிபர் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜமீர் அகமதுகான் வீட்டில் அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்.

பெங்களூரு: பெங்களூருவில் நகைக்கடை அதிபர் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜமீர் அகமதுகான் வீட்டில் அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்.

அமலாக்கத்துறை சோதனை

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஜமீர் அகமதுகான். முன்னாள் மந்திரியான இவருக்கு, பெங்களூரு சிவாஜிநகரை சேர்ந்த மன்சூர்கான்  நகைக்கடைகள் நடத்தி ரூ.4 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள ஜமீர் அகமதுகானுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 6 இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை 5.45 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை அவரது வீட்டில் சோதனை தொடர்ந்து நடந்திருந்தது.

2-வது நாளாக சோதனை

இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் ஜமீர் அகமதுகான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். குறிப்பாக பெங்களூரு பம்பு பஜாரில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் தான் நேற்றும் தொடர் சோதனை நடந்திருந்தது. அந்த வீடு தொடர்பான தகவல்களை அதிகாரிகள் ஜமீர் அகமதுகானிடம் விசாரித்து பெற்றுக் கொண்டனர். அந்த வீட்டுக்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். 

அதுபோல், அவர் நடத்தி வரும் நேஷனல் டிராவல்ஸ் மூலம் கிடைத்த வருவாய் பற்றிய தகவல்கள், அதில் பங்குதாரர்களாக இருப்பவர்களின் விவரம், அது சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கிய ஆவணங்கள் சிக்கியது

குறிப்பாக நகைக்கடை அதிபர் மன்சூர்கானுடன் உள்ள தொடர்பு?, அவருக்கு ரூ.90 கோடி மதிப்பிலான வீட்டை ரூ.9.38 கோடிக்கு விற்க காரணம் என்ன? என்பது குறித்தும் ஜமீர் அகமதுகானிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். மேலும் மகளின் திருமணத்திற்காக செய்த செலவு தொகை எவ்வளவு?, இதற்காக மன்சூர்கானின் நகைக்கடையில் இருந்து தங்க நகைகளை வாங்கினீர்களா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்ததாக தெரிகிறது.
அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் ஜமீர் அகமதுகான் வீட்டில் இருந்து சிக்கியதாகவும், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

33 மணிநேரம் நடந்தது

ஒட்டு மொத்தமாக நேற்று முன்தினம் அதிகாலை 5.45 மணியளவில் இருந்து நேற்று மதியம் 3 மணிவரை என 33 மணிநேரம் ஜமீர் அகமதுகான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். 
இதுதொடா்பாக ஜமீர் அகமதுகானுக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீசு அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில் தனது வீட்டில் நடந்த சோதனை குறித்து ஜமீர் அகமது கான் நிருபர்களிடம் கூறியதாவது:- 
நகைக்கடை அதிபர் மோசடி செய்த விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் சோதனை நடந்திருப்பதாகவும் வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. பம்பு பஜாரில் உள்ள எனக்கு சொந்தமான வீடு பற்றி சிலர் அமலாக்கத்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் தான் எனது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். எனது வீட்டில் சோதனை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்தேன். அவர்கள் கேட்ட தகவல்கள் அனைத்தையும் வழங்கினேன். 

ஆவணங்களை வழங்கி உள்ளேன்

அந்த வீடு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், எனது வங்கி கணக்குகளின் விவரங்கள் அனைத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வழங்கி உள்ளேன். 
இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் முன்னாள் மந்திரி ரோசன் பெய்க் வீட்டிலும் நேற்று 2-வது நாளாக சோதனை நடந்திருந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள், சிவாஜிநகரில் உள்ள ரோசன் பெய்க் வீடு, அவரது மகள் வீட்டில் சோதனை நடத்தி இருந்தார்கள். அவர்களது வீடுகளில் இருந்தும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக ஜமீர் அகமதுகானின் அரண்மனை போன்ற வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்களையும் அதிகாரிகள் முழுவதுமாக வீடியோ எடுத்து கொண்டனர். வீட்டில் உள்ள டைல்ஸ்களை எங்கிருந்து வாங்கியதாக அதிகாரிகள் ஜமீர் அகமதுகானிடம் கேட்டதாகவும், அவர் வெளிநாட்டில் இருந்து வாங்கினேன் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story