ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; பெங்களூருவில் பதுங்கி இருந்த தமிழக வாலிபர் கைது
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த வாலிபரை, பெங்களூருவில் பதுங்கி இருந்த போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த வாலிபரை, பெங்களூருவில் பதுங்கி இருந்த போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வாலிபர் கைது
பெங்களூருவுக்கு பயங்கரவாதிகளால் தொடர்ந்து மிரட்டல் இருந்து வருகிறது. இந்த நிலையில், பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக பெங்களூரு டவுன்ஹால் பகுதியில் வசித்து வந்த வாலிபரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவரது பெயர் அப்துல்லா என்ற மாதேஷ் பெருமாள் (வயது 23) என்று தெரிந்தது. இவர், இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்.
மாதேஷ் பெருமாளின் சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். அவரது தந்தை, தாய் பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர். தற்போது அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர். மேலும் மாதேஷ் பெருமாள், பி.யூ.சி. தேர்வில் தோல்வி அடைந்திருந்தார்.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு
அதன்பிறகு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சம்பந்தப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்கள் மூலமாக அவர் பார்த்து வந்துள்ளார். அந்த பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய பிரமுகர்களுடன் அவர் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து முழு நேரமாக பணியாற்றவும் மாதேஷ் பெருமாள் திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் அவரை சில காரணங்களுக்காக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களது அமைப்பில் சேர்த்து கொள்ளாமல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாசவேலையில் ஈடுபட சதி?
கைதான மாதேஷ் பெருமாளை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் நாசவேலையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டினாரா என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், வெளிநாட்டுக்கு செல்ல தனது தந்தையிடம் மாதேஷ் பணம் கேட்டு வந்ததாகவும், ஆனால் அவர் கொடுக்காததால், அவரால் வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்தும் அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
பட்கல்லை சேர்ந்தவர்
உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் டவுனை சேர்ந்தவர் ஜீப்ரிஜவகர் தாமுடி. இவரும் சிரியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் நேற்று அவரது வீட்டில் சோதனை நடந்தது. அப்போது ஜீப்ரிஜவகர், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் அவரை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story