ரெட்டியார்சத்திரத்தில் கார் மோதி வேளாண்மை அதிகாரி சாவு


ரெட்டியார்சத்திரத்தில் கார் மோதி வேளாண்மை அதிகாரி சாவு
x
தினத்தந்தி 7 Aug 2021 4:12 PM GMT (Updated: 2021-08-07T21:42:33+05:30)

ரெட்டியார்சத்திரத்தில் கார் மோதி வேளாண்மை அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

கன்னிவாடி:
ரெட்டியார்சத்திரத்தில் கார்  மோதி வேளாண்மை அதிகாரி பரிதாபமாக இறந்தார். 
வேளாண்மை அதிகாரி
திண்டுக்கல் அருகே உள்ள  காந்திகிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 50). இவர் பழனி முருகன் கோவில் அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். 
திருப்பதி காந்திகிராமத்தில் இருந்து பழனிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்பி வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை அவர் காந்திகிராமத்தில் இருந்து பழனி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ரெட்டியார்சத்திரம் பெருமாள் கோவில் அருகே அவர் வந்தபோது, முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளில் அதே ஊரை சேர்ந்த ஐஸ் வியாபாரியான வேல்   முருகன் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பதி, அவரை முந்தி செல்ல முயன்றார். 
கார் மோதி பலி
அப்போது எதிர்பாராதவிதமாக வேல்முருகனின் மோட்டார் சைக்கிள் மீது திருப்பதியின் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த திருப்பதி சாலையின் நடுவிலும், வேல்முருகன் சாலையோரத்திலும் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே திருப்பூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் விழுந்து கிடந்த திருப்பதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார். 
இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான திருப்பதியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, கார் டிரைவரான திருப்பூரை சேர்ந்த வினோத்ராஜ் (29) என்பவரை கைது செய்தனர். 

Next Story