வாக்குச்சாவடி இறுதிப்பட்டியல் 11-ந் தேதி வெளியிடப்படும்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி இறுதிப்பட்டியல் 11-ந் தேதி வெளியிடப்படும் என்று கலெக்டர் டி.மோகன் தெரிவித்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 2,946 வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 4-ந் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்த வாக்குச்சாவடி பட்டியல்களை இறுதி செய்தல் தொடர்பாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்கள், பொதுமக்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான டி.மோகன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், சக்கரபாணி, அர்ஜூணன், சிவக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடி இறுதிப்பட்டியல்
கூட்டத்தில் கலெக்டர் டி.மோகன் பேசுகையில், வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்வது, கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் நாளைக்குள் (திங்கட்கிழமை) தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் எழுத்து மூலம் தெரிவிக்கலாம். வாக்குச்சாவடிகளின் இறுதிப்பட்டியல் அனைத்தும் 11-ந் தேதியன்று வெளியிடப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன், சரவணன் (வளர்ச்சி) மற்றும் அனைத்து உதவி இயக்குனர் நிலையிலான மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story