திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தென்மாபட்டி காத்தாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் முத்துமீனா (வயது 20). இவர் கடந்த 3-ந் தேதி இரவு தென்மாபட்டி வள்ளுவர் தெருவைச்சேர்ந்த தனது உறவினரான அய்யாக்கண்ணு மகன் அருண்குமாருடன் மோட்டார் சைக்கிளில் தென்மாபட்டியிலிருந்து சிவகங்கை சாலையில் சென்றுள்ளார். அப்போது கே.கே.நகர் அருகே சென்ற போது, ரோட்டில் நடந்து சென்ற அலாவூதீன் என்பவர் திடீரென ரோட்டை கடந்துள்ளார். இதனால் திடீரென அருண்குமார் பிரேக் அடித்ததில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அலாவூதீன் மீது மோதி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் முத்துமீனாவுக்கு தலையில் படுகாயமும், அலாவூதீன் மற்றும் அருண்குமாருக்கு லேசான சிராய்ப்பு காயமும் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். முத்துமீனா மட்டுமே மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமீனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.