முதியவர் கொலை வழக்கில் தந்தை-மகன் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 Aug 2021 1:08 AM IST (Updated: 8 Aug 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே முதியவர் கொலை வழக்கில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தோகைமலை
முதியவர் கொலை
தோகைமலை அருகே உள்ள சின்னையம்பாளையம் ஊராட்சி ஈச்சம்பட்டி சேர்ந்தவர் மாரியாயி (வயது 70). இவரது சகோதரர்கள் சுப்பா நாயக்கர்(65), பொம்மா நாயக்கர் (55), கிருஷ்ண நாயக்கர் (54). இவர்களுக்கு ஈச்சம்பட்டியில் 60 ஏக்கர் நிலம் உள்ளது. அவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக குளித்தலை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பொம்மா நாயக்கர் தரப்பினருக்கும், கிருஷ்ண நாயக்கர் தரப்பினருக்கும் இடையே மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது கிருஷ்ண நாயக்கரின் மாமனார் காம நாயக்கரை(70), பொம்மா நாயக்கர் தரப்பினர் தடியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கிருஷ்ண நாயக்கருக்கும், அவரது மகன் சின்னசாமி நாயக்கருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
2 பேர் கைது
இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக பொம்மா நாயக்கர், அவரது மகன் முத்துசாமி (20) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story