ஆசிரியர் உள்பட 2 பேர் வீடுகளில் 13 பவுன் நகை-ரூ.3 லட்சம் திருட்டு


ஆசிரியர் உள்பட 2 பேர் வீடுகளில் 13 பவுன் நகை-ரூ.3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 7 Aug 2021 8:39 PM GMT (Updated: 2021-08-08T02:09:34+05:30)

ஆசிரியர் உள்பட 2 பேர் வீடுகளில் 13 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்:

ஆசிரியர்
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் ராணி (வயது 50). இவர் தற்போது தனது மகன் அருண்குமாருடன் பெரம்பலூர் 11-வது வார்டுக்கு உட்பட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அபிராமபுரம் 3-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ராணி பெரம்பலூர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். அருண்குமார் கடலூர் மாவட்டம், கீழக்கல்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
தற்போது ராணி அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு ராணியும், அவரது மகனும் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் நேற்று காலை எழுந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் இருந்த 3 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 6 ஆயிரம், மடிக்கணினி, ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருட்டு போயிருந்தது.
10 பவுன் நகை
இதேபோல் ராணி வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசித்து வரும் மாரிமுத்துவின் மனைவி சின்னப்பிள்ளை (45), கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான ஆலத்தூர் தாலுகா ஆதனூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோக்களில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் ஆகியவை திருட்டு போயிருந்தது.
மேலும் அதே வீட்டின் 2-வது மாடியில் வாடகைக்கு வசிக்கும் திருச்சி கோர்ட்டில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் பொன்னுசாமி என்ற ரீகன் (33) நேற்று முன்தினம் இரவு காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவுகளை திறந்து வைத்து குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் அவரது வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை
ஒரே தெருவில் 3 வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பான புகார்களின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story