சாலைப்பணி நடந்த இடத்தை பொதுமக்கள் முற்றுகை


சாலைப்பணி நடந்த இடத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Aug 2021 2:16 AM IST (Updated: 8 Aug 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

சாலைப்பணி நடந்த இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஜெயங்கொண்டம் நகருக்கு தெற்கு பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை சூரிய மணல் கிராமத்தில் பிரிந்து, கரடிகுளம், பெரியவளையம் கிராமங்கள் வழியாக சின்ன வளையம் கிராமத்தில் இணைகிறது. அந்த புறவழிச்சாலை பெரிய வளையம் கிராமத்தில், அய்யனார் கோவில் அருகே மாநில சாலையை கடந்து செல்கிறது. இந்த மாநில சாலை ஜெயங்கொண்டம், பெரியவளையம், ஆயுதகளம், கடாரங்கொண்டான், உட்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஜெயங்கொண்டம் நகரத்திற்கு செல்லவும், மாணவ, மாணவிகள் பள்ளி செல்லவும், நோயாளிகள் மருத்துவமனை செல்லவும், விவசாயிகள் தங்களது பொருட்களை எடுத்துச் செல்லவும் என இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் சாலையாக அமைந்துள்ளது. இந்நிலையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை பெரியவளையம் கிராமத்தில் மாநில சாலையை கடக்கும் இடத்தில், சுமார் 12 அடி உயரத்திற்கு சாலை போடப்படுகிறது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளை சோந்்த மக்கள் புறவழிச் சாலையை கடந்து ஜெயங்கொண்டம் செல்ல பெரிதும் அவதிப்படும் நிலை உருவாகும் என்பதால், பெரியவளையம் கிராமத்தில் மேம்பாலம் அல்லது அணுகு சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் மேம்பாலம், அணுகுசாலை எதுவும் அமைக்காமல் சாலைப் பணியை தனியார் நிறுவனம் தொடர்ந்து செய்வதாக தெரிகிறது. இதனால் பெரியவளையம் ஊராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முதல் சாலை பணியை தொடரக்கூடாது என்று பணி நடந்த இடத்தில் முற்றுகையிட்டனர். மேலும் இரவு நடைபெற உள்ள சாலை பணியை தடுத்து நிறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story