சிவகிரியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை


சிவகிரியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
x
தினத்தந்தி 7 Aug 2021 9:21 PM GMT (Updated: 2021-08-08T02:51:11+05:30)

சிவகிரியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி கக்கன்ஜி பிராட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சந்தியா (வயது 20). இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பலகுள்ளை கிராமம் ஆகும்.
இவர்கள் இருவரும் சென்னை அருகே உள்ள மணமேடு செங்கல் சூளையில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் மாரியப்பன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு மாரியப்பன் மதுபோதையில் இருந்ததால் அவரை சந்தியா சத்தம் போட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

நேற்று காலையில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது மாரியப்பன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து மாரியப்பன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு    அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோரும் விசாரித்தனர்.

சந்தியாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் ஹஸ்ரத் பேகம் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story