ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மத்திய அரசு மாற்றம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது; டி.கே.சிவக்குமார் பேட்டி
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மத்திய அரசு மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மத்திய அரசு மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது;-
கண்டிக்கத்தக்கது
இந்திய விளையாட்டு துறையில் உயரிய சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த விருதின் பெயரை தயான் சந்த் என்ற பெயரில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நாட்டின் இளைஞர்களுக்கு வாக்குரிமை, விளையாட்டு துறையில் செய்யும் சாதனைக்காக ராஜீவ் காந்தி கொடுத்த பரிசாகும்.
தற்போது ராஜீவ் காந்தி கேல் ரத்னா பெயரிலான விருதின் பெயரை மாற்றி இருப்பதன் மூலம் மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவது தெளிவாகி இருக்கிறது. தயான் சந்த் பெயரை சூட்டியதை எதிர்க்கவில்லை. அவர், இந்த நாட்டின் சொத்து. ஆனால் ராஜீவ் காந்தி பெயரில் இருந்த விருதை, தயான் சந்த் பெயருக்கு மாற்றி இருப்பதை தான் காங்கிரஸ் எதிர்க்கிறது.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
மத்திய அரசு தாங்கள் புதிதாக தொடங்கும் திட்டம், நிகழ்ச்சிகளுக்கு எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்து கொள்ளட்டும். ஆனால் விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றக்கூடாது. பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் பல கோடி ரூபாய்க்கு சிலை அமைத்தார். அவரது பெயரில் இருந்த விளையாட்டு மைதானத்தின் பெயரையே, பிரதமர் தனது பெயரை சூட்டி இருக்கிறார். இது சரி தானா?.
மத்திய அரசு மக்களுக்கு எதிரான செயல்களை செய்து வருகிறது. 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்கும். அதுபோல், கர்நாடகத்திலும் காங்கிரஸ் அரசு அமைவது உறுதி.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story