சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு


சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு
x
தினத்தந்தி 8 Aug 2021 11:31 AM IST (Updated: 8 Aug 2021 11:31 AM IST)
t-max-icont-min-icon

சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச்சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காரனோடை ஊராட்சி ஒன்றிய பகுதியை சேர்ந்தவர் கண்ணியலால். இவரது மகன் அர்ஜூன் (வயது 14). இவரும் அதே பகுதியை சேர்ந்த சத்யநாராயணன் (15), சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சையது ரகமத்துல்லா (13) ஆகிய 3 பேரும் நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுவர்களது பெற்றோர்கள் அவர்களை பல இடங்களில் தேடினர். இந்த நிலையில், ஜனப்பசத்திரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரையில் சிறுவர்களது ஆடைகள் கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து செங்குன்றம் தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர் ஜெயச்சந்திரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து சிறுவர்களை தேட ஆரம்பித்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் ஆற்றில் மூழ்கி சேற்றில் சிக்கிய சிறுவர்களின் உடல்களை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனைக்கண்ட சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் ஆற்றின் சேற்றில் சிக்கி பலியான அர்ஜூன், சத்தியநாராயணன், சையதுரகமதுல்லா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வீட்டுக்குத் தெரியாமல் கொசஸ்தலை ஆற்றுக்கு சென்று குளிக்க சென்ற 3 சிறுவர்களும் ஆற்றில் குளித்தபோது சேற்றில் சிக்கி பலியானது தெரியவந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் சிறுவர்களை காப்பாற்ற யாரும் வர முடியாத சூழ்நிலையில் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story