18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவு


18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவு
x
தினத்தந்தி 8 Aug 2021 8:54 PM IST (Updated: 8 Aug 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நகர் பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

கொடைக்கானல்: 

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் விசாகன் நேற்று ஆய்வு செய்தார். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆக்சிஜன் மையத்தை அவர் பார்வையிட்டார். 

இதைத்தொடர்ந்து மேல் மலைப்பகுதியில் உள்ள மன்னவனூரில்  சாகச சுற்றுலா திட்டம் கட்டப்பட உள்ள இடம், கூட்டுறவு அலுவலர்களுக்கான பயிற்சி மையம் கட்டப்படும் இடம் ஆகியவற்றையும் பூண்டி கிராமத்தில் சுமார் ரூ.12 கோடியில் வெள்ளைப் பூண்டு பதப்படுத்துதல் நிலையத்துக்கான கட்டிட பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கொடைக்கானல் நகர் பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மொத்தம் 24 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

 தமிழகத்திலேயே முதன்முறையாக கொடைக்கானலில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மைய கட்டிட பணியை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

ஆய்வின்போது, ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் சந்திரன், நகராட்சி ஆணையாளர் நாராயணன், அரசு தலைமை மருத்துவர் பொன் ரதி, வட்டாரமருத்துவ அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story