கோவையில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு


கோவையில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2021 4:36 PM GMT (Updated: 8 Aug 2021 4:36 PM GMT)

கொரோனா பரவல் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக கோவையில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடின.

கோவை

கொரோனா பரவல் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக கோவையில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடின.

கொரோனா பாதிப்பு

கோவையில் கடந்த 2 வாரங்களாக தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 

அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. இது தவிர ஞாயிற்றுக்கிழமையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க  கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. 

கடைகள் அடைப்பு 

இதையடுத்து கோவையில் கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7-வது வீதிகள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லைத்தோட்ட சந்திப்பு ஆகிய 9 இடங்களில் அத்தியாவசிய கடைகளான மருந்தகம், காய்கறி, மளிகை கடைகளை தவிர பிற கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கோவை மாநகர பகுதியில் உள்ள 9 இடங்களில் இருக்கும் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. 

இதன் காரணமாக அந்தப்பகுதியில் உள்ள சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டது. 

ஏமாற்றத்துடன் திரும்பினர் 

மேலும் அந்தப்பகுதியில் இருந்த 9 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக மதுபிரியர்கள் அங்கு வந்து கடைகள் மூடப்பட்டு இருந்ததை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

அதுபோன்று பூட்டப்பட்ட கடைகளில் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.
சாலைகள் வெறிச்சோடின

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பூங்காக்களும் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் பூங்காக்கள் வெறிச்சோடியது. 

அதுபோன்று 100 அடி ரோடு, அவினாசி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்பட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடின. 


Next Story