பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


பொள்ளாச்சி சுற்று வட்டார  பகுதியில் ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 8 Aug 2021 10:41 PM IST (Updated: 8 Aug 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், அவர்கள் வாசலில் நின்றபடி சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், அவர்கள் வாசலில் நின்றபடி சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

ஆடி அமாவாசை

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை பொதுஇடங்களில் கூட்டங்கள் கூடுவதை தடுக்க தமிழக அரசின் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் அரசின் உத்தரவின்பேரில், நேற்று முன்தினம் முதல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.  மேலும் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில், கிணத்துக்கடவு பகுதியில் பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில், கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில், சிவலோகநாதர் சிவலோக நாயகி கோவில், கரியகாளியம்மன் கோவில் மற்றும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அம்மன் கோவில்கள் உள்ளிட்ட பல கோவில்கள் நடை மூடப்பட்டு இருந்தன.

கோவில்களில் சிறப்பு பூஜை

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 இதில் கோவில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். ஆனாலும் ஆடி அமாவாசையையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கோவில் நுழைவு வாயிலில் உள்ள கேட் முன்பு சூடம் ஏற்றி, பழம் வைத்து, தேங்காய், உடைத்து அம்மன் வழிபட்டு சென்றனர்.

இதேபோல பொள்ளாச்சியில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், அ.சங்கம்பாளையம் சக்திமாரியம்மன் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், சூளேஸ்வரன்பட்டி ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ விஜய கணபதி சுப்பிரமணியர் கோவில்,  சுல்தான் பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றது.

கோவில் வாசலில் வழிபாடு

இதேபோல கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சூலக்கல் மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. நெகமத்தை அடுத்த செட்டியக்காபாளையம் நாகம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்ததில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், பல கோவில்களில் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சமூக இடைவெளியை பின்பற்றி சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்து சென்றனர். 

தரிசனம் செய்ய தடை

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவலை தடுக்க விசேஷ நாட்களில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளன.

இதன்படி வருகிற 11, 13, 14, 15, மற்றும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் கோவில்களில் நடை திறக்கப்படாது. ஆனாலும் கோவில்களில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட சாமிகளுக்கு வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும். இதில் பக்தர்கள் யாருக்கும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story