விருத்தாசலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 9½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு போலீசார் விசாரணை
விருத்தாசலம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 9½ பவுன் தாலி சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த பரவளூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயி. இவரது மனைவி சரிதா (வயது 37). நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சரிதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதில் திடுக்கிட்டு எழுந்த சரிதா, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் எழுந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றார். அதற்குள் மர்மநபர்கள் சரிதாவின் கழுத்தில் கிடந்த 9½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
வாலிபரை பிடித்து விசாரணை
இதையடுத்து பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மர்மநபர்களை பிடிப்பதற்காக ஓடிச்சென்றனர். இருப்பினும் மர்மநபர்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.
இதற்கிடையே அந்த வழியாக வந்த முகுந்த நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story