காமராஜர் திறந்து வைத்த அரசு பள்ளியின் அவலநிலை


காமராஜர் திறந்து வைத்த அரசு பள்ளியின் அவலநிலை
x
தினத்தந்தி 8 Aug 2021 11:15 PM IST (Updated: 8 Aug 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

தோட்டக்குறிச்சியில் காமராஜர் திறந்து வைத்த அரசு பள்ளி சிதலமடைந்து கிடக்கிறது. எனவே புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்
அரசு பள்ளி கட்டிடம்
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக கடந்த 1962-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. இந்த பள்ளியை அன்றைய தமிழக முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் திறந்து வைத்தார். இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 65 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் வகுப்பறைக்குள் ஆங்காங்கே கட்டிடம் பெயர்ந்து விழுந்து வருகின்றன. அதேபோல் மேற்கூரையின் ஓடுகள் ஆங்காங்கே உடைந்து ஓட்டை விழுந்துள்ளது. 
மாணவர்கள் அச்சம்
மழை பெய்யும் போது வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் நனைந்து வகுப்பறையின் ஓரத்தில் நின்று பாடம் படிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மேற்கூரையில் உள்ள மரச்சட்டங்கள் மழைநீரில் நனைந்து கரையான் அரித்து உடைந்து வகுப்பறைக்குள் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர்.
இலை, தலைகள்
பாடம் நடத்தும்போது மேற்கூரையின் சட்டமும், ஓடுகளும் வகுப்பறைக்குள் திடீரென விழுந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பாதிக்கப்படும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அதேபோல் வகுப்பறையின் முன் பக்க சுவரில் ஏற்பட்டுள்ள இடைவெளியில் கம்பி வலைகளை அடித்துள்ளனர். இதனால் பலத்த காற்று வீசும் போது பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழும் இலை, தலைகள் மற்றும் தூசுகளால் வகுப்பறைகள் முழுவதும் நிறைந்து விடுகின்றன.  இதனால் மழை மற்றும் காற்று காலங்களில் மாணவ, மாணவிகள் பாடம் கற்றுக் கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 
பொதுமக்கள் கோரிக்கை 
காமராஜர் திறந்து வைத்த பள்ளி தற்போது சிதலமடைந்து இருப்பதால் பொதுமக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். எனவே பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பள்ளிக்கு தேவையான புதிய வகுப்பறை கட்டிடங்களை தொழிலதிபர் ஒருவரும் இலவசமாக கட்டிட தருவதாகவும், அதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Next Story