18 விண்கற்களை கண்டறிந்த கூடலூர் அரசு பள்ளி ஆசிரியை
18 விண்கற்களை கண்டறிந்த கூடலூர் அரசு பள்ளி ஆசிரியைக்கு சான்றிதழ் வழங்கி நாசா பாராட்டு தெரிவித்தது.
கூடலூர்,
18 விண்கற்களை கண்டறிந்த கூடலூர் அரசு பள்ளி ஆசிரியைக்கு சான்றிதழ் வழங்கி நாசா பாராட்டு தெரிவித்தது.
18 விண்கற்கள் கண்டுபிடிப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் 1-ம் மைல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்தவர் தமிழ் ஆசிரியை செந்தில்குமாரி. இவர் உள்பட அறிவியலில் ஆர்வம் உள்ள தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த 23 ஆசிரியர்கள் ‘விண்கற்களை கண்டறிதல்' என்ற சர்வதேச அளவிலான திட்டத்தில் சேர்ந்தனர்.
இதன் நோக்கம், விண்கற்களை கண்டறிந்து, அவற்றை வகைபடுத்துவதே ஆகும். சர்வதேச வானவியல் ஆராய்ச்சி முகமை சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொண்ட ஆய்வில், 18 விண்கற்களை ஆசிரியை செந்தில்குமாரி கண்டறிந்தார். அவரை பாராட்டி இணையதளம் மூலம் நாசா சான்றிதழ் வழங்கி உள்ளது.
நீலகிரி மாவட்டத்திலேயே ஆசிரியை செந்தில்குமாரி மட்டுமே இந்த சாதனையை படைத்து உள்ளார். அவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின், கூடலூர் கல்வி மாவட்ட அலுவலர் பழனிச்சாமி உள்பட அதிகாரிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
பாராட்டு சான்றிதழ்
இதுகுறித்து ஆசிரியை செந்தில்குமாரி கூறியதாவது:- பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விண்கற்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க அறிவியலின் மீது ஆர்வம் உள்ள மக்களின் பங்கெடுப்புடன் மேற்கொள்ளும் செயல்முறைக்கு ‘மக்கள் அறிவியலாளர் ஆய்வுகள்’ என்று சர்வதேச அளவில் பெயரிடப்பட்டு உள்ளது.
இதற்காக ‘விண்கற்களை கண்டறிதல்' என்ற திட்டத்தில் சேர்ந்து, ஹவாயில் உள்ள பான் ஸ்டார்ஸ்-1 என்ற தொலைநோக்கி மூலம் ஆண்டு முழுவதும் இரவில் எடுக்கப்படும் வானியல் படங்களை பிரத்யேக மென்பொருள் உதவியுடன் பெங்களுருவில் இருந்து ஆராய்ந்தோம். இதற்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து 23 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த 1 மாதம் நடத்திய ஆய்வில் 40 நகரும் வான்பொருட்கள் கண்டறியப்பட்டது. இதில் 18 விண்கற்கள் கண்டறியப்பட்டு, விஞ்ஞானிகளால் உறுதி செய்யப்பட்டு வகைபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மக்கள் அறிவியலாளர் என்று நாசா பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story