மாவட்ட செய்திகள்

ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோரங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் + "||" + Audi New Moon

ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோரங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோரங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோரங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். கோவில் வாசல்களில் சூடமேற்றி வழிபட்டனர்.
கரூர்
ஆடி அமாவாசை
கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். கொரோனா காலம் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. 
கரூர் மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆடி அமாவாசையை யொட்டி சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெற்றது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில் முன்பு இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில், ஏராளாமான பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர். இதேபோல் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தாந்தோணிமலை கல்யாண வெங்டரமணசுவாமி கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கோவில் முன்பு நின்று வழிபட்டு சென்றனர். 
குளித்தலை 
குளித்தலையில் உள்ள கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை முதலே குளித்தலை மற்றும் பல கிராமப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட பலர் வந்திருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். 
பின்னர் காவிரி ஆற்றங்கரையோரம் ஆங்காங்கே இருந்த புரோகிதர்களிடம் சென்று அமர்ந்து, இறந்த தங்களது தாய், தந்தை, தாத்தா, பாட்டி மற்றும் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றும், எல்லா நன்மைகளையும் அவர்கள் தங்களுக்கு செய்யவேண்டும் என்று வேண்டி வாழை இலையில் பிண்டங்கள் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். 
சூடமேற்றி வழிபாடு
இதையடுத்து அவற்றை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். இதனைதொடர்ந்து காவிரி ஆற்றங்கரை செல்லும் வழியில் ஆங்காங்கே கட்டப்பட்டு இருந்த பசு மாடுகளுக்கு தாங்கள் கொண்டுவந்த அகத்திக்கீரையை உணவாக அளித்து வணங்கினார்கள். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடைவிதித்திருந்த காரணத்தால், காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்யவந்தவர்கள் உள்பட அனைவரும் இந்த கோவில் வாசலின் முன்பு சூடமேற்றி சாமியை வழிபட்டு சென்றனர்.