சமூக வலைத்தள குற்றங்கள் குறித்து பெண்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்-போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


சமூக வலைத்தள குற்றங்கள் குறித்து பெண்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்-போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 9 Aug 2021 12:31 AM IST (Updated: 9 Aug 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தள குற்றங்களை பெண்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்

சிவகங்கை,

சமூக வலைத்தள குற்றங்களை பெண்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்.

24 மணி நேர ரோந்து

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 43 போலீஸ் நிலையங்கள் உள்ளன.இந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு, மற்றும் குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கைக்காக தற்போது 24 மணி நேரமும் ரோந்து சுற்றும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக சிவகங்கை மாவட்டம் 85 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை, மானாமதுரை, மற்றும் திருப்புவனம் ஆகிய ஊர்களில் தலா 4 பிரிவுகளாகவும் திருப்பத்தூர், தேவகோட்டை, மற்றும் காரைக்குடி ஆகிய ஊர்கள் தலா மூன்று பிரிவுகளாகவும் மற்ற பகுதிகள் தலா இரண்டு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
 இவைகளில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள் மேலும் இதற்காக ஒவ்வொரு ஊரிலும் 30 இடங்களில் பட்டா புத்தகங்கள் வைக்கப்படும். போலீசார் இதில் கையெழுத்திடுவர்.இதன் மூலம் குற்றங்கள் குறைவதுடன் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே நல்உறவு ஏற்படும். மேலும் சந்தேகத்திற்கிடமாக ரோடுகளில் திரிபவர்களை பிடித்து அவர்களின் கைரேகை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கந்துவட்டி

இது தவிர தற்போது புதியதாக முகத்தை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் முறை கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் சந்தேகப்படும் ஒருவரின் முகத்தை கேமராவில் பதிவு செய்தால் அந்த நபர் மாநிலத்தில் எங்கு குற்றச் செயலில் ஈடுபட்டு பிடிபட்டு இருந்தாலும் அவரது விவரம் உடனடியாக தெரிந்து விடும். தற்போது புதியதாக திருப்பத்தூர் மற்றும் தேவகோட்டை பகுதிகளில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுபவர்கள் இது குறித்து புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கூட மதகுபட்டி பகுதியில் கந்துவட்டி கேட்டு தொந்தரவு கொடுத்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில்...

மேலும் பெண்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்கள் குறித்து இணையதளம் மூலமாக புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் சிவகங்கை அருகே ஒரு சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாக வந்த புகாரின் மீது அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
எனவே சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்கள் குறித்து பெண்கள் தைரியமாக புகார் தரலாம். மாவட்டத்தில் திருடுபோன செல்போன்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது வரை திருடுபோன சுமார் 35-க்கும் மேற்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.
 பேட்டியின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story