புதுச்சேரியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புதுச்சேரியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புதுச்சேரி, ஆக.9-
புதுச்சேரியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா தலம்
புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
விடுமுறை தினத்தையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பல மாதங்களுக்கு பிறகு தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. ஓட்டல்கள், கடைகளில் வியாபாரம் அமோகமாக நடந்தது.
கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் களை கட்டியது. கடற்கரை சாலையில் தலைமை செயலகத்தில் இருந்து பழைய துறைமுக பாலம் வரை செயற்கை மணல் பரப்பு உருவாகி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்.
போக்குவரத்து நெரிசல்
நோணாங்குப்பம் படகு குழாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்துநின்று படகு சவாரி செய்தனர். இதேபோல் நகரின் ஒயிட் டவுன் பகுதியில் பல இடங்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரி நகர பகுதியில் ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. இதனால் நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக அதனை நம்பியுள்ள அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சண்டே மார்க்கெட்
புதுவை சண்டே மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர். அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story