ஊராட்சி மன்ற துணை தலைவர் வீட்டில் 10 பவுன் நகை- ரூ.65 ஆயிரம் திருட்டு
மீன்சுருட்டி அருகே ஊராட்சி மன்ற துணை தலைவர் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
மீன்சுருட்டி:
ஊராட்சி மன்ற துணை தலைவர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சம்போடை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து என்ற காளிதாசன் (வயது 55). இவர் முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை அப்பகுதியில் மழை பெய்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வீட்டை பூட்டிவிட்டு வரண்டாவில் தனது மகள்களுடன், காளிதாசன் தூங்கியதாக தெரிகிறது. அதிகாலை 5 மணியளவில் காளிதாசன் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சாமி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பீரோவில் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 7½ பவுன் ஆரம், ஒரு ஜோடி தங்கத்தோடு, ஜிமிக்கிகள், காது மாட்டல்கள் என மொத்தம் 10 பவுன் நகைகளும், ரூ.65 ஆயிரமும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை-பணம் திருட்டு
பின்னர் வெளியில் வந்து பின்பக்க கதவை திறந்து பார்த்தபோது, அந்த கதவு கடப்பாரையால் நெம்பி திறக்கப்பட்டிருந்ததும், அந்த வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது, தெரியவந்தது. இதுகுறித்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராஜதுரை ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர் சத்யராஜ் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகளை சேகரித்தார். மேலும் அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் ‘டெய்சி’ திருட்டு நடந்த வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று திரும்பியது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
மற்றொரு வீட்டில்...
மேலும் அதே கிராமத்தில் ஜெயங்கொண்டம்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள ஜோதி(52) என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால், அதே சாலையில் உள்ள சாமிநாதன் மகன் தியாகராஜன் (35) என்பவரது வீட்டில் பீரோவில் இருந்த வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ஒரே நாள் இரவில் 2 வீடுகளில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story