கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கவில்லை


கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கவில்லை
x
தினத்தந்தி 9 Aug 2021 1:52 AM IST (Updated: 9 Aug 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் இயங்கும் கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கவில்லை என அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.

கருங்கல்:
குமரியில் இயங்கும் கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கவில்லை என அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார். 
39 கல் குவாரிகள்
கருங்கலில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டம் பசுமை வாய்ந்த சூழியல் சிறப்புமிகு மாவட்டம் ஆகும். இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையானது  மாவட்டத்தில் மழைவளம், பசுமை வளம் செழிக்க காரணியாய் இருக்கிறது.
குமரியில் ஏற்கனவே அமலில் இருந்த சட்ட விதிகளின்படி  சூழியல் உணர்ச்சிமிகு மண்டலத்தில் இருந்தும் 10 கி.மீ. தூரத்திற்கு கனரக தொழிற்சாலைகளோ, சுரங்கங்களோ, குவாரிகளோ செயல்பட அனுமதி இல்லை. ஆனால் கடந்த அ.தி.மு.க. அரசின் ஆட்சி காலத்தில் விதிகளுக்கு புறம்பாக கல்குவாரிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு 39 குவாரிகள் செயல்பட்டு வந்தன. 
இந்த குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கல், ஜல்லி போன்றவை கேரளாவிற்கு அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தன. இதனால் அதிகமாக சாலை விபத்துக்களும், சாலைகள் பழுதடைவதும் வாடிக்கையாகி வந்தது.
தி.மு.க.வுக்கு தொடர்பு இல்லை
 இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து, லாரிகளை சிறை பிடித்தல் போன்ற போராட்டங்கள் நடத்தினர். ஆனால், இவை எதற்கும் அப்போதைய அரசு செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து அதன் மூலம் குவாரிகள் மூடப்பட்டன.
பின்னர் குவாரி உரிமையாளர்கள், அப்போதைய ஆளுங்கட்சியினர் தலையீட்டால் சூழியல் உணர்ச்சிமிகு மண்டலம் 10 கி.மீ. சுற்றளவு என்றிருந்த விதியை 0-3 கி.மீ என சுருக்கி மறுவரையறை செய்யப்பட்டது. இதனை காரணம் காட்டி கோர்ட்டு உத்தரவு பெற்று மூடப்பட்ட குவாரிகள் யாவும் மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கும் புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க. அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
அனுமதி அளிக்கப்படவில்லை
தற்போது குமரியில் இயங்கும் குவாரிகளில் இருந்து கல், ஜல்லி, எம்சாண்ட் போன்ற கனிமவளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் சாலைகள் பழுதடையும் விதத்தில் அதிகனரக லாரிகள் இயக்க கூடாது எனவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரமேற்றக்கூடாது எனவும், குவாரிகள் பின்பற்ற வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிக பாரமேற்றி வரும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story