தொழில் அதிபர் வீட்டில் திருட்டு; நேபாளத்தினர் உள்பட 4 பேர் கைது- ரூ.18.40 லட்சம் பறிமுதல்
பெங்களூருவில் தொழில் அதிபர் வீட்டில் திருடியதாக நேபாளத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.18.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு:
அமெரிக்க டாலர்கள் திருட்டு
பெங்களூரு மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ராஜாஜிநகர் 6-வது பிளாக்கில் வசித்து வருபவர் விஜய். தொழில் அதிபரான இவர் கிரானைட் தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி விஜய் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் விஜயின் வீட்டின் மாடி கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த அமெரிக்க டாலர்கள், ரூ.18.40 லட்சத்தை திருடி சென்று இருந்தனர்.
இதுகுறித்து விஜய் அளித்த புகாரின்பேரில் மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் விஜயின் வீட்டில் திருடியது நேபாள நாட்டை சேர்ந்த தீபக் தகூர்கா, சுரேஷ் பகதூர், கமல் பகதூர் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேருக்கும் விஜயின் வீட்டில் அதிக பணம், நகைகள் இருப்பது பற்றி தெரியவந்து உள்ளது.
கைது
இதனால் நகைகள், பணத்தை கொள்ளையடிக்க 4 பேரும் திட்டம் தீட்டி வந்து உள்ளனர். இந்த நிலையில் விஜய் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றது பற்றி அறிந்ததும் 4 பேரும் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியது தெரிந்தது.
மேலும் இவர்கள் 4 பேரும் திருடிய பணத்துடன் நேபாளத்திற்கு தப்பி செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.18.40 லட்சம் ரொக்கம், ரூ.3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேர் மீதும் மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story