டி.ஜே.ஹள்ளி கலவர வழக்கில் தலைமறைவாக உள்ள 7 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை


டி.ஜே.ஹள்ளி கலவர வழக்கில் தலைமறைவாக உள்ள 7 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 9 Aug 2021 2:08 AM IST (Updated: 9 Aug 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

டி.ஜே.ஹள்ளி கலவர வழக்கில் தலைமறைவாக உள்ள 7 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

பெங்களூரு:

எம்.எல்.ஏ. வீட்டிற்கு தீ வைப்பு

  பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தியின் அக்காள் மகன் நவீன் தனது முகநூல் பக்கத்தில் முஸ்லிம் சமூகத்தினர் குறித்து சில அவதூறு கருத்துகளை பதிவிட்டு இருந்தார். இதனால் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீட்டிற்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையங்களும் சூறையாடப்பட்டன. பொது மற்றும் அரசு சொத்துகள் சேதம் அடைந்தன. கலவரக்காரர்கள் தாக்கியதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

  இந்த கலவர வழக்கு குறித்து கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 300 பேர் வரை கைது செய்யப்பட்டு இருந்தனர். கலவர வழக்கில் கைதான சிலருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. கலவர சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 பேரின் வீடுகளில் சோதனை

  இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கலவரம் தொடர்பாக 247 பேர் மீது 7 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று உள்ள 7 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

  இந்த நிலையில் தலைமறைவாக உள்ள 7 பேரின் வீடுகளிலும் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் 7 பேரின் குடும்பத்தினரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி சில தகவல்களை பெற்று கொண்டனர்.

Next Story