கதவின் பூட்டுகளை உடைத்து வீடுகளில் நகை, பணம் திருட்டு


கதவின் பூட்டுகளை உடைத்து வீடுகளில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 9 Aug 2021 8:53 AM IST (Updated: 9 Aug 2021 8:53 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டில் மர்மநபா்கள் கதவின் பூட்டுகளை உடைத்து வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்தனர்.

பேரணாம்பட்டு

மொட்டை மாடி வழியாக வந்த மர்மநபர்

பேரணாம்பட்டு டவுன் ரஷீதாபாத் பகுதி ஷேக்மீரான் தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர் (வயது 35). இவர், பேரணாம்பட்டு பஜார் தெருவில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தனது குடும்பத்தினருடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு பேரணாம்பட்டுக்கு வந்தார். 

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்களும் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்தை காணவில்லை. மர்மநபர் யாரோ வீட்டின் மொட்டை மாடி வழியாக வந்து, பின்பக்க கதவின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.

இதுகுறித்து சிக்கந்தர் பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் கேசவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சபாரத்தினம், தினகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மகள் திருமணத்துக்கு சேர்த்து வைத்தது

மேலும் கடந்த 6-ந்தேதி பேரணாம்பட்டு டவுன் ரஷீதாபாத் பகுதியில் உள்ள சித்திக் நகரில் வசிக்கும் பரிதாபானு என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு மகன் வீட்டுக்குச் சென்றிருந்தார். மர்மநபர் யாரோ அவரின் வீட்டுப்பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மகள் திருமணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த 3 பவுன் நகை, வெள்ளிக் கால்கொலுசு, ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றனர்.

ஒரே பகுதியில் நடந்த தொடர் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இரவில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story