மோட்டார் சைக்கிள்-மினி வேன் மோதல்; கல்லூரி ஊழியர் பலி
கன்னிகைபேரில் மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி ஊழியர் பலியானார்.
நேருக்கு நேர் மோதல்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் குப்பம் கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 46). இவர் கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கன்னிகைபேர் கிராமத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தனசேகரன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இதையடுத்து, கன்னிகைப்பேர் பஜார் வீதியில் வந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த மினிவேனும் நேருக்கு, நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தனசேகரன் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர்.
பரிதாப பலி
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி அவர் நேற்று பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான மினிவேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். விபத்துக்கு காரணமான தலைமறைவான டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.பலியான தனசேகருக்கு சுப்ரியா (35) என்ற மனைவியும், விஷ்ணு (11), மாதவன் (7) என்ற மகன்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story