ஜாமீனில் வெளியே வந்தவருக்கு அரிவாள் வெட்டு


ஜாமீனில் வெளியே வந்தவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 9 Aug 2021 4:41 PM IST (Updated: 9 Aug 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து

தளி, ஆக.10-
உடுமலை அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
ஜாமீனில் வந்தவர்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரத்தை சேர்ந்தவர் சீனான் என்கிற  மாரிமுத்து. இவர் கடந்த 2016ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமன் வயது 47 என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் ராமனுக்கு 2019ம் ஆண்டு தாராபுரம் கோர்ட்டு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு  செய்தார். இந்த வழக்கில்  ஜாமீனில்  வெளியில் வந்த ராமன் தனது மாமனார் ஊரான தேனிமாவட்டம் வத்தலகுண்டுவில் தங்கியிருந்தார். 
 இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லாபுரத்தில் தனது பெயரில் உள்ள சொந்த வீட்டை விற்பனை செய்வதற்காக ராமன்  வந்துள்ளார்.  இதை அறிந்த  மாரிமுத்துவின் அண்ணன் மகனான கூலித்தொழிலாளி பிரபாகரன் 22 தனது சித்தப்பாவை கொலை செய்த ராமனை பழி தீர்ப்பதற்காக கண்காணித்து வந்துள்ளார். அதன்படி கடந்த 7ந் தேதி மாலை 5 மணிக்கு கல்லாபுரம் பகுதிக்கு உட்பட்ட பூச்சிமேடு அருகே தனியாக சென்று கொண்டிருந்த ராமனை பிரபாகரன் வழிமறித்து உள்ளார்.
அரிவாள் வெட்டு
பின்னர் அவரிடம் எனது சித்தப்பாவை கொலை செய்துவிட்டு ஊரில் வந்து திரிந்து கொண்டு இருக்கிறாயா என்று கூறி வாக்குவாதம் செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் அரிவாளால்  ராமனை  வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் வெட்டுக்காயம் அடைந்த ராமன் அலறினார். 
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் ராமனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரபாகரனை தீவிரமாக தேடி வந்தனர்.அவர் கல்லாபுரம் அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார்  பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சம்பவம் கல்லாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-

Next Story