8 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி
8 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்செந்தூர்:
8 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
8 நாட்களுக்கு பிறகு அனுமதி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை போன்ற நாட்களிலும் பக்தர்களின்றி வழக்கமான பூஜைகள் எளிமையாக நடந்தது.
இந்த நிலையில் 8 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டப்பின், அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. ேமலும் கடலில் புனித நீராடுவதற்கும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இன்று ஆடிப்பூர விழா
திருச்செந்தூர் கோவிலில் ஆடிப்பூர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, காலை 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னர் மகாமண்டபத்தில் விநாயகர் சன்னதி அருகே உள்ள யாகசாலை மண்டபத்தில் பார்வதி அம்மன் எழுந்தளுகிறார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது.
தொடர்ந்து மகா மண்டப சன்னதிக்கு பார்வதி அம்மன் செல்கிறார். பின்னர் மற்ற கால பூஜைகள் நடக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
நாளை அனுமதி கிடையாது
மற்ற கோவில்களில் ஆடிப்பூர விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருச்செந்தூர் கோவிலிலும் நாளை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கோவிலில் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story