தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 425 மனுக்களுக்கு தீர்வு


தூத்துக்குடி மாவட்டத்தில்   போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 425 மனுக்களுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 Aug 2021 6:26 PM IST (Updated: 9 Aug 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 425 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 425 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
விசாரணை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் மனுக்கள் மீதான விசாரணை நடத்தும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. தூத்துக்குடியில் உள்ள தனியார் மகாலில் தூத்துக்குடி நகரத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்த விசாரணை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் 96 மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டது. புகார்தாரர், எதிர்மனுதாரர் ஆகியோர் வரவழைக்கப்பட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஷ், ஆனந்த ராஜன், ஜெயசீலன், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
425 மனுக்களுக்கு தீர்வு
மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடந்த முகாமில் தூத்துக்குடி உட்கோட்டத்தில் 99 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. அதே போன்று தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 33 மனுக்களுக்கும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 51 மனுக்களுக்கும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 116 மனுக்களில் 85 மனுக்களுக்கும், மணியாச்சி உட்கோட்டத்தில் 33 மனுக்களுக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 86 மனுக்களுக்கும், விளாத்திக்குளத்தில் 45 மனுக்களுக்கும் சாத்தான்குளத்தில் 22 மனுக்களுக்கும் ஆக மொத்தம் 485 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு 425 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்கு செல்வதால், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அது போன்று நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்துவதற்காக மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் முகாம் நடந்தது. இந்த முகாமில் இரு தரப்பினரும் வருவதால் விரைவாக தீர்வு எட்டப்படுகிறது. மனுக்கள் அதிகம் சேரும் போது, இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 425 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது’ என்று கூறினார்.

Next Story