ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க ரூ.37 லட்சம் நிதி
கொடைக்கானலில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க ரூ.37 லட்சத்தை இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றும் தொழிலதிபர்கள் மாவட்ட கலெக்டர் விசாகனிடம் வழங்கினர்.
திண்டுக்கல்:
பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் மற்றும் கொடைக்கானலை சேர்ந்த தொழில் அதிபர்கள் நேற்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் விசாகனை நேரில் சந்தித்து பேசினர். அப்போது கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க எனது பங்களிப்பாக எனது ஒரு மாத சம்பள தொகையான ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை வழங்குகிறேன் என்று கலெக்டரிடம் பழனி எம்.எல்.ஏ. கூறி அதற்கான காசோலையையும் வழங்கினார்.
அவரை தொடர்ந்து கொடைக்கானலை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்களது பங்களிப்பாக ரூ.36 லட்சத்துக்கான காசோலையை கலெக்டரிடம் வழங்கினர்.
இதையடுத்து இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் 3-வது அலையை சமாளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் யாரும் உயிரிழக்க கூடாது என்பதற்காக கொடைக்கானலில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. வெள்ளைப்பூண்டு வியாபாரிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடைக்கானல் நகராட்சி 100 சதவீத தடுப்பூசி போட்ட நகராட்சியாக மாறி உள்ளது. இதுபோல பழனி நகராட்சியும் விரைவில் மாறும். கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அவருடன் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணன் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story