திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 4:24 PM GMT (Updated: 9 Aug 2021 4:24 PM GMT)

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தலையில் முக்காடு போட்டு

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு, கையில் வேப்பிலை கொத்து, நெல்லுடன் கூடிய முறத்தை வைத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்துக்கு புருஷோத்தமன் தலைமை தாங்கினார். விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தில் இயங்கி வரும் 71 நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோவிந்தா..கோவிந்தா.. எனக் கோஷம் எழுப்பினர். கற்பூரம் ஏற்றி, கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு தரையில் விழுந்து வணங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெல் கொள்முதல் நிலையங்கள்...

அப்போது விவசாயிகள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 71 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக அறுவடை நடந்து வருகிறது. 

ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் நெல் மூட்டைகள் குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மூட்டைக்கு ரூ.600 வீதம் மாவட்டம் முழுவதும் ரூ.3 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படுகிறது. 

அறுவடை நேரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல், பின்னர் திறந்தும் பயன் இருக்காது. எனவே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதை எடுத்துரைக்கும் விதமாக நெல்லை முறத்தில் வைத்து தூற்றுவதுபோல் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம், என்றனர்.

Next Story