வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 10:02 PM IST (Updated: 9 Aug 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும் திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கள்ளக்குறிச்சி

ஆர்ப்பாட்டம்

நமது நாட்டின் விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடகு வைக்கக்கூடாது, தொழிலாளர் சட்ட தொகுப்பை கைவிட வேண்டும், 3 வேளாண் சட்டங்களையும் மற்றும் மின்சார திருத்த மசோதாவையும் திரும்ப பெற வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களையும், தினசரி சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள், மக்கள் அதிகாரம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 கள்ளக்குறிச்சி 

அந்த வகையில்  கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இந்திய தொழிலாளர் சங்கம், இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யூ.மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அப்பாவு, இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணி, மாவட்ட குழு உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் ராமலிங்கம், சாந்தமூர்த்தி, ரீட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சின்னசேலம்

அதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சின்னசேலம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் மூக்கன் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் சன்னியாசி, முனியப்பன், மணிவேல் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரகுராமன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜான்பாஷா விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் பழனி, சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் வீராசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

உளுந்தூர்பேட்டை

இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். 






Next Story