வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 10:16 PM IST (Updated: 9 Aug 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும் திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நமது நாட்டின் விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடகு வைக்கக்கூடாது, தொழிலாளர் சட்ட தொகுப்பை கைவிட வேண்டும், 3 வேளாண் சட்டங்களையும் மற்றும் மின்சார திருத்த மசோதாவையும் திரும்ப பெற வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களையும், தினசரி சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள், மக்கள் அதிகாரம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மக்கள் அதிகாரம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஆகியவை சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சகாபுதீன், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாகி இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் போராட்டக்குழு நிர்வாகிகள் லட்சுமி, மூர்த்தி, நிதானம், செல்வராஜ், ஏழுமலை, மாசிலாமணி, ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story