தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி சரிவு


தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி சரிவு
x
தினத்தந்தி 9 Aug 2021 10:23 PM IST (Updated: 9 Aug 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி சரிவடைந்தது.

ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, கண்டமனூர், தேக்கம்பட்டி, காமாட்சிபுரம், கோவிந்தநகரம், மரிக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. பொதுவாக கேரளாவில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது, தேனி மாவட்டத்தில் அதிகமாக காற்று வீசக்கூடும். 
இந்த காற்று ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வீசும். இந்த காலக்கட்டத்தில் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி முழு அளவில் இருக்கும். அதிகபட்சமாக ஒரு காற்றாலையில் ஒரு நாளைக்கு 38 ஆயிரம் யூனிட் வரையில் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். கடந்த வாரம் தேனி மாவட்டத்தில் சராசரியாக காற்றின் வேகம் வினாடிக்கு 13 மீட்டர் என்ற அளவில் இருந்தது. இதனால் ஒரு காற்றாலை சராசரியாக 35 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்தது. 
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் வீசி வரும் காற்றின் வேகம் குறைந்தது. அதன்படி, தற்போது மாவட்டத்தில் காற்றின் வேகம் வினாடிக்கு 9 மீட்டராக குறைந்துவிட்டது. இதனால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் சரிந்து காணப்படுகிறது. 
தற்போது ஒரு காற்றாலையின் ஒரு நாள் மின்சார உற்பத்தி 24 ஆயிரம் முதல் 25 ஆயிரம் யூனிட் என்ற அளவில் சரிந்துள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் காற்றின் வேகம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக காற்றாலை பணியாளர்கள் கூறினர். அப்போது மின்சார உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

Next Story