பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்-ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
வேலை நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்புச்சாரா நலவாரிய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தது. மேலும் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமன், பொருளாளர் வடிவேல், துணைத்தலைவர் முனியப்பன், துணைச்செயலாளர் ஹரிஹரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். முடிவில், மாவட்ட துணை பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமன் பேசியதாவது:-
வருமானம் பாதிப்பு
கிருஷ்ணகிரி நகரத்தில் மட்டும் 1500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. இந்த தொழிலை நம்பி 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. தினமும் ஆட்டோ ஓட்டினால் மட்டுமே வருமானம் கிடைக்கும். இந்தநிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனாவால் வருமானம் பாதிக்கப்பட்டு, கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்வால், ஆட்டோக்களை இயக்க முடியவில்லை
எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வந்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், 600-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி நகரில் நேற்று ஆட்டோக்கள் இயக்கப்படாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடந்தது. தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர ஆட்டோ சங்க தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம், பொருளாளர் கிருஷ்ணன், துணைத்தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் துணைச்செயலாளர் சரவணன், துணை பொருளாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story