ரூ.6 கோடி தேயிலைத்தூள் தேக்கம்


ரூ.6 கோடி தேயிலைத்தூள் தேக்கம்
x
தினத்தந்தி 9 Aug 2021 11:17 PM IST (Updated: 9 Aug 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதால், ரூ.6 கோடி தேயிலைத்தூள் தேக்கம் அடைந்து உள்ளது.

ஊட்டி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதால், ரூ.6 கோடி தேயிலைத்தூள் தேக்கம் அடைந்து உள்ளது.

டீசல் விலை உயர்வு

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயம் உள்ளது. இங்கு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், சேமிப்பு குடோன்களில் வைத்து ஏலம் விடப்படும். தொடர்ந்து லாரிகள் மூலம் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக லாரி உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வேலை நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் மூட்டைகளை ஏற்றிச்செல்லும் சரக்கு லாரி உரிமையாளர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப வாடகை விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் வாடகை கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இதனால் கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத்தூள் மூட்டைகளை ஏற்றிச்செல்லும் சரக்கு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ரூ.6 கோடி வரை தேயிலைத்தூள் முட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளது. அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அதற்கு ஏற்ப வாடகை கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

தேயிலைத்தூள் தேக்கம்

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:- ஒரே ஆண்டில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.35 வரை விலை உயர்ந்து உள்ளதால் வாடகையை உயர்த்தி தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை செவிசாய்க்கவில்லை. இதனால் கடந்த 10 நாட்களாக லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பிற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய தேயிலைத்தூள் குடோன்களில் தேக்கமடைந்து உள்ளது. 

எனவே இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிப்படைந்து உள்ளனர். எனவே அரசு இதுகுறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story