போராட்டம் நடத்த நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு
சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம் நடத்த நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட ஜெய்பீம் நகர் முதல், மாதவ நகர், காந்தி நகர் வழியாக புதிய பஸ் நிலையம் வரை செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் அப்பகுதி சாலை புதுப்பிக்கப்பட வில்லை.
இரவு நேரங்களில் மின் கம்பங்களில் உள்ள விளக்குகளும் எரியாததால் இரவு நேரத்திலும், மழையின் போதும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கீழே விழுந்து காயங்களுடன் செல்ல நேரிடுவதாக கூறப்படுகிறது.
இதனைகண்டித்தும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி பெண்கள் பா.ஜ.க. மாவட்ட பட்டியல் அணி துணைத்தலைவர் இன்பா தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது நகராட்சி மேலாளர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து ஆணையரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அவர்கள் கோரிக்கையினை மனுவாக அளித்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story